Wednesday, September 12, 2012

கூடங்குளம் மனித குலத்திற்கு கூடாதகுலம்

கூடங்குளம் மனித குலத்திற்கு கூடாதகுலம்


கூடங்குளம் பிரட்சினையை போரட்டக்குழுவும், அரசாங்கமும் தங்களின் இரு தரப்பு நிலைபாட்டிலும் அப்படியே முட்டுக்கட்டையாய் இருப்பதால் தற்போது இருக்கின்ற நிலை இன்னும் மோசமாக போவதற்கு வாய்புகள் அதிகமாக உள்ளது.  அரசாங்கமும் போரட்டகுழுவும் தற்போது இருக்கின்ற பதற்றத்தை தனித்து பொது மக்களை காப்பாற்ற, தங்கள் தரப்பில் இருவருமே விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தையை துவங்கினால் மாத்திரமே முடியும். 

கூர்மையாக சிந்திக்கும் திறம் கொண்டவர் நமது முதல்வர்.  ஆகவே இந்த நிலையை நீடிக்க விடுவது மாநிலத்திற்கு நல்லது அல்ல என்பது அவருக்கு நன்றாக தெரியும்.  யார் முதலில் துவங்குவது என்று தன்முனைப்பு இல்லாமல் இருவரும் இறங்கி வந்து உடனடியாக பேச்சுவார்த்தையை துவங்கவேண்டும். அரசாங்கத்தின் தரப்பிலே தற்போது இருக்கின்ற மின் வெட்டு பிரட்சினையை சமாளிக்க கூடங்குளத்தை நம்பியே தீரவேண்டும்.  15,000 கோடிக்கும் மேல் மக்களின் வரி பணத்தை செலவு செய்து முடிக்கப்பட்ட ஒரு திட்டத்தை திறப்பு விழாகூட காணாமல் மூடு விழா காணவேண்டும் என்பது ஏற்புடையது அல்ல.  அதே வேளையில் ஆபத்து விளைவிக்க கூடிய அணு உலை மின் திட்டம் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுகின்ற உரிமை அப்பகுதி மக்களுக்கு நிச்சயமாக உண்டு.  அந்த மக்களின் ஐயத்தை போக்கவேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.  ஆகவே தங்களின் கடமையை உணர்ந்து அரசு மக்களின் அச்சத்தை போக்கவேண்டும்.

அது போல அணு உலை எதிர்பாளர்களும், அந்த திட்டம் துவங்கும் போதே தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து, அதை வராமலே செய்திருக்க முடியும். ஆனால் திட்டம் முடிவடைந்து துவங்கப்படும் பொது அதை தடுக்க நினைப்பது ஏற்புடையது அல்ல.  அதே வேளையில் போரட்டக் குழுவினரின் பின்னணி, நோக்கமெல்லாம் செய்திகளில் அடிப்படுவதுபோல் தவறாகவே இருந்தாலும் கூட, அணு உலை நமக்கு வேண்டாம் என்ற அவர்களின் வாதம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடையது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

போராடக்குழுவினர் தங்களின் தொடர் போராட்டங்களின் மூலமாக மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் விதமாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான மனித வளங்களையும், 15,000 கொடிகளுக்கும் மேலாக பொருட் செலவையும் செலவு செய்து கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அந்த மிகப் பெரிய திட்டத்தை முடக்கிவிட முனைவது சிறுபிள்ளைத் தனமானது. அறிவார்ந்த சிந்தனை இருப்பின் அவர்கள் தங்களின் அழுத்தமான போராட்டத்தின் மூலமாக இந்த அணு உலை திட்டத்தை தடுக்க முடியவிட்டாலும், அதே கூடங்குளத்தில் மேலும் வர இருக்கின்ற நான்கு அணு உலைகலையும், மேலும் தமிழகத்தில் இனி எங்குமே அணு உலை வராமலும் தடுக்கக்கூடிய வகையிலே தங்களின் போராட்ட வியூகத்தை அமைத்தார்கள் என்றால், கூடங்குளத்தில் மாத்திரம் மையமிட்டிருக்கின்ற இந்த குறுகிய போராட்டம், ஒரு மிகப்பெரிய பெரிய அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கமாக உருவெடுக்க வாய்ப்பிருக்கின்றது.

ஆகவே, சூழ்நிலையை உணர்ந்து இரு தரப்புமே தடைகளை தாண்டி பேச்சு வார்த்தையை துவங்கினால், கூடங்குளம் பகுதி அப்பாவி பொது மக்களின் பதற்றம் தணிந்து அமைதியான சூழலை அங்கே உருவாக்கமுடியும்.  உச்சகட்ட பாதுகாப்புடன் இயக்கப்பட வேண்டிய அணு உலையை பதற்றமான சூழலில் இயக்குவது என்பது மனித தவறுகளுக்கு வழிவகுத்து ஆபத்தான விபத்துகளுக்கு வித்திட்டுவிடும் என்பதை இரு தரப்பும் உணர்ந்து, பதற்றத்தை தணிக்க முனைவது மனித குலத்திர்க்கே நல்லது.

No comments:

Post a Comment