Thursday, September 20, 2012

தி.மு.க-இவர்களின் மத்திய அரசுக்கு எதிராக இவர்களே போராடுவார்களாம்-யாரை முட்டாளாக்க?

தி.மு.க-இவர்களின் மத்திய அரசுக்கு எதிராக இவர்களே போராடுவார்களாம்-யாரை முட்டாளாக்க?


காங்கிரசு கட்சியின் ஆட்சியில் தொடர்ந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் தாறுமாறாக ஏற்றி வந்த வேளையில், தற்போது மீண்டும் சாமான்ய மக்களை வதைக்கின்ற வகையிலே டீசல் விலை ஏற்றம், சமையல் எரிவாயு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஆகியவற்றை  ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கின்ற தி.மு.க, திரினாமுல் காங்கிரசு ஆகிய கட்சிகளும் எதிர் கட்சிகளுடன் இணைந்து எதிர்த்து வருவதாக நாடகம் அரங்கேற்றி வருகின்றார்கள்.

மத்திய அரசாங்கத்தின் எந்த முக்கிய அறிவிப்பாக இருந்தாலும் அதை அறிவிப்பதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளை ஆலோசித்த பின்பே அறிவிப்பார்கள். அதே போல் தற்போது மத்திய காங்கிரசு அறிவித்திருக்கின்ற டீசல் விலை ஏற்றம், சமையல் எரிவாயு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஆகிய அறிவிப்புகளும் தி.மு.க, திரினாமுல் காங்கிரசு ஆகிய கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்த அறிவிப்பும் வந்துள்ளது. மத்திய அமைச்சர்களின் கூட்டத்திலே தங்களின் எதிர்ப்பை அவர்கள் தெரிவித்திருந்தால், இந்த அறிவிப்பை அவர்களால் தடுத்திருக்க முடியும்.  ஆனால் மக்களை பாதிக்கும் இந்த அறிவிப்பை தடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுவிட்டு இப்பொழுது மக்களுக்காக மத்திய அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதுபோல் நாடகம் ஆடுகின்றார்கள்.

திரினாமுல் காங்கிரசு ஒவ்வொரு பிரச்சினையிலும் காங்கிரசு கட்சியை வழக்கமாய் மிரட்டுவது என்பது புதிதல்ல என்றாலும் கூட அதன் மூலமாக ஏதோ ஒரு வகையில் மாநிலத்திற்கு நிதியையும், திட்டங்களையும் பெற்று தம் மக்களுக்கு நன்மைகள் செய்தார்.  தேசத்தின் நலனை அவர் கருத்தில் கொள்ளவில்லை என்றாலும் கூட மாநிலத்தின் நலன்களை எப்பொழுதும் அவர் விட்டுக்கொடுத்ததில்லை.

ஆனால் தேச நலனையோ, மாநில நலனையோ, மக்கள் நலனையோ கருத்தில் கொள்ளாமல், தன் நலனையும், தன் மக்கள்(பிள்ளைகள்) நலனையும் மாத்திரம் கருத்தில் கொண்டு காங்கிரசு கட்சியிடம் பேரம் பேசுவது தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வழக்கம்.  3 லட்சத்திற்கும் மேலான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதனை தடுப்பதற்காக காங்கிரசு அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. கூட்டணியை விட்டு வெளியேருவோம்  என்று ஒரு வார்த்தை கூறியிருந்தாலும் கூட  ஈழத்திலே 3 லட்சம் தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். ஈழத் தமிழர்களை கொல்வதற்காக இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவிலே அதுவும் தமிழகத்திலே ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுக்கும் எதிராக கொலை பயிர்ச்சி கொடுத்ததற்காக காங்கிரசை  எதிர்த்து ஒரு குரல் கொடுத்திருந்தாலும் அது நிறுத்தப்பட்டிருக்கும்.  தமிழக மீனவர்கள் இலங்கை கப்பர் படையல் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப் படுவதற்கும் எதிராக ஒரு குரல் கொ டுத்திருந்தாலும் தமிழக மீனவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை பெறுவதற்காக ஒரு அழுத்தமான குரல் மத்திய அரசிடம் கொடுத்திருந்தாலும் இன்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். காங்கிரசுக்கு போதுமான அழுத்தத்தை  கொடுத்திருந்தால் முல்லைபெரியறு, பாலாறு, தென்பென்னையார் பிரட்சினைகளில்  தமிழகத்தின் உரிமை காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஆனால் ஒட்டு மொத்தமாக தமிழகத்தின் 40 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தன்னகத்தே கொண்டிருந்தும், மத்திய அரசில் பலம் வாய்ந்த அசைக்க முடியாத கூட்டாளியாக இருந்தும், தமிழகத்தின் எந்த பிரட்சினயையும் தீர்க கருணாநிதி அவர்கள் முயற்சிகூட எடுக்கவில்லை என்பது வேதனையான உண்மை.  இப்படி செல்வாக்கான கூட்டாளியாக இருந்துமே தமிழகத்திற்காக எதையும் செய்யாத கருணாநிதி அவர்கள், இப்பொழுது ஏதோ திடீர் ஞானம் வந்தவர் போல டீசல் விலை ஏற்றம், சமையல் எரிவாயு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஆகியவற்றை கண்டித்து மத்திய அரசாங்கத்திற்கு எதுராக எதிர் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவதாக நாடகம் போடுகின்றார்.

இவர்கள் அங்கம் வகிக்கின்ற மத்திய அரசாங்கத்திற்கு எதிராக இவர்களே போராட்டம் நடத்துவார்களாம், இதை மக்கள் நம்பவேண்டுமாம். 2012 ஆம் ஆண்டில் கூட இன்னும் மக்களை முட்டாள்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி அவர்களுக்கு தக்க பதிலடியை கொடுக்க வேண்டும்.

Thursday, September 13, 2012

நிலக்கரி ஊழல்-இந்திய தாயின் முகத்தில் கரியை பூசிய இத்தாலிய பேய்

நிலக்கரி ஊழல்-இந்திய தாயின் முகத்தில் கரியை பூசிய இத்தாலிய பேய்


ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ஊழல் பிசாசு தலைவிரித்து தாண்டவம் ஆடுவதை மக்கள் வெறும் பார்வையாலராகத்தான் பார்க்கமுடுயுமா? தி.மு.க-காங்கிரசு கூட்டணி ஆட்சியில் நாட்டில் உயர்வு என்றால் அது ஊழல், விலைவாசி, இந்த இரண்டில் மாத்திரம் தான்.  நாட்டின் இயற்க்கை வளங்களை கொள்ளையடிப்பதில் இந்த தி.மு.க-காங்கிரசு கட்சிகள் மிகப்பெரிய சாதனைகளை செய்திருக்கின்றார்கள். ஒலிம்பிக் விளையாட்டிலே எந்த விளையாட்டிலும் ஒரு தங்க பதக்கம் கூட பெறவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கும். ஒலிம்பிக்கில் ஊழலுக்கு என்று ஒரு போட்டி வைத்திருந்தால் அதில் இந்தியா பல தங்க பதக்கங்களை அள்ளி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனும் அளவிற்கு இவர்களின் ஊழல் கொடிகட்டி பறக்கின்றது.

மண்ணிற்கு அடியில் இருக்கும் எல்லா தாது பொருட்களும் மத்திய அரசிற்கே சொந்தம் என்பதால், அது எல்லாம் தங்களுக்கே சொந்தம் என்கின்ற ரீதியில், பூமிக்கி அடியில் இருக்கும் நிலக்கரியை எல்லாம் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மிக குறைந்த விலைக்கு தாரைவார்த்து கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்துக் கொண்டிருக்கும் சாமானிய மக்களை பாதிக்கின்ற வகையில் மீண்டும் டீசல் விலையை தாறுமாறாக ஏற்றி இருப்பதற்கு மன்மோகன்சிங் கூறுகின்ற விளக்கம் என்ன தெரியுமா? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏறி இருப்பதால் தவிர்க்க முடியாத காரணத்தால் டீசல் விலையை  ஏற்ற  வேண்டி இருக்கின்றது. ஏற்கனவே 1.8 லட்சம் கோடி ரூபாய் இழப்பை என்னை நிறுவனங்கள் சந்தித்து வருகின்றது.  இந்த விலை ஏற்றத்தை செய்யவில்லை என்றால் இந்த இழப்பு 2 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.  அகவே இந்த இழப்பை சரி செய்ய வேண்டும் என்றால், சில கசப்பான மருந்தை உட்கொள்ள வேண்டும். பணம் நமக்கு மரத்தில் காய்ப்பதில்லை. ஆகவே விலை ஏற்றத்தை தவிர்க்க முடியாது என்று குதர்க்கமான விளக்கத்தை பிரதமர் கொடுத்திருப்பது மக்களை கேலி செய்வது போல் உள்ளது.  ஏழை மக்கள் அவதி பட்டாலும் பரவாயில்லை, ஆனால் என்னை நிறுவனங்கள் இழப்பை சந்திக்க கூடாது என்ற பிரதமரின் எண்ணம்   மக்களை எந்த அளவிற்கு அற்பமாக நினைக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

அதே பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலே நாடு இழப்பை சந்தித்தாலும் பரவாயில்லை, டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் லாபம் அடையவேண்டும் என்று மிகக் குறைந்த விலைக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்திருக்கின்றார்.

எரிபொருள் விலை ஏற்றத்தால் எரியும் ஏழைகளின் வயிறு

எரிபொருள் விலை ஏற்றத்தால் எரியும் ஏழைகளின் வயிறு


எரிகின்ற வீட்டில் எண்ணையை ஊற்றுவது போல, ஏற்கனவே இந்த அரசாங்கம் ஏற்றிய விலைவசியையே எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் விழி பிதுங்கி இருக்கின்ற மக்களுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக இப்பொழுது டீசல் விலையை தடாலடியாக உயர்த்தி இருக்கும் இந்த காங்கிரசு அரசின் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. விலைவாசியை கட்டுப்பாட்டில் வைக்கத்தெரியாத இந்த காங்கிரசு அரசாங்கம், தங்களின் இயலாமையால் ஏற்பட்ட சுமைகளை மக்களின் தலையில் ஏற்றி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

தற்போது கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் 115 டாலராக ஏறிவிட்டதால் நாமும் தவிர்க்க முடியாமல் பெட்ரோல், டீசல் விலையை உள்நாட்டு சந்தையில் ஏற்ற வேண்டியுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.  ஆனால் இதற்க்கு முன்பு கச்சா எண்ணை 115 டாலராக இருந்த பொழுதெல்லாம் தற்போது உயர்த்தப்பட்டுள்ள விலைக்கு பெட்ரோல், டீசல் விற்கப்பட்டதா? என்றால் இல்லையே.  வாஜ்பாய் அவர்களின் ஆட்சியில் கூட கச்சா எண்ணை பல முறை 115 டாலருக்கு மேல் இருந்துள்ளது, ஆனால் டீசல் 26 ரூபாயை தாண்டி செல்லவே இல்லையே.  காங்கிரசின் ஆட்சியில் மாத்திரம் விலை ஏற்றம் ஏன்?

அவர்கள் புதியதாக கூறுகின்ற காரணம் ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக வீழ்ச்சி அடைந்து விட்டது என்று.  இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கு யார் காரணம்?. மத்திய அரசாங்கத்தின் தவறான கொள்கைகளே ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்பது சாதாரண சாமான்யனுக்கு கூட தெரியும். அப்படி இருக்கையிலே மத்திய அரசு செய்த தவற்றினால் ஏறிய விலையை மக்களின் தலையில் ஏற்றுவது என்ன ஞாயம்?

டீசல் விலைவாசி உயர்வு என்பது ஒரு சாதரணமான செய்தி அல்ல.  டீசல் விலை ஏறினாள், பேருந்து கட்டணம், புகைவண்டி கட்டணம், காய்கறி, உப்பு, மிளகாய், சர்க்கரை என்று மனிதன் பயன்படுத்தும் அத்தனை அத்தியாவசிய பொருட்களின் விலையும் மேலும் ஏற்றமடையும்.  ஏற்கனவே தாறுமாறாக ஏறி இருக்கின்ற விலைவசியாலே திணறிக் கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கு, இது மேலும் குரவலையை நெரிக்கும் செயலாகும். மக்களை பற்றியே சிந்திக்காத மந்தி(ரி)களின் கூட்டம் இன்று மத்தியில் ஆட்சியில் இருப்பதால் சாமான்யனின் அன்றாட பிரட்சினைகள் இவர்களுக்கு புரிவதில்லை.  டாட்டாகளையும், அம்பானிகளையும் மாத்திரம் சிந்திக்கின்ற அரசுக்கு, ஏழைகளின் தேவைகள் புரிவதில்லை. டாட்டா களுக்கும், அம்பானிகளுக்கும் நிலக்கரியையும், இயற்கை எரிவாயு மற்றும் ஏனைய இயற்கை வளங்களை மிகக்குறைந்த விலைக்கு தாரைவார்த்து எப்படி ஆதாயம் காணலாம் என்று மாத்திரம் சிந்திக்கின்ற அரசுக்கு, ஏழைகளை பற்றி சிந்திக்க நேரம் எது? டாட்டாகளுக்கும், அம்பானிகளுக்கும் அவர்களின் தேவையை எப்படி குறைந்த விலையில் பூர்த்தி செய்யலாம் என்று சிந்திக்கின்ற அரசு, ஏழைகளின் அத்தியாவசிய தேவைகளை எப்படி குறைந்த விலையில் பூர்த்தி செய்யலாம் என்று சிந்திக்க நேரம் இல்லை.

கோமாளிகளின் கூடாரமாக திகழ்கின்ற மத்திய அரசாங்கத்தை, தனது குடும்பத் தேவைகாக மாத்திரம் மிரட்டும் தி.மு.க தலைவர், இந்த விலைவாசி உயர்வை குறைக்க உங்களின் கூட்டணி அரசை வலியுறுத்துவீர்களா? என்று கேட்டால், எங்களுக்கு மத்திய அரசாங்கத்தை மிரட்டத் தெரியாது என்று குதர்க்கமாக பேசுகிறார்.  மத்திய அரசிடம் தங்களுக்கு வேண்டிய இலாக்காக்களை கேட்டு பெறுவதற்கு மிரட்டத் தெறியும், கூட்டணியில் சீட்டை பெறுவதற்கு மிரட்டத் தெறியும், உறவினர்களுக்கு அமைச்சர் பதவி வாங்க மிரட்டத் தெரியும். ஆனால் ஈழத்தமிழனை காப்பாற்ற மிரட்டத் தெரியாது, ஏழை மக்களை பாதிக்கும் விலைவாசியை குறைக்க மிரட்டத் தெரியாது. இப்படிப்பட்ட சுயநலவாதிகள் என்று அரசியலில் இருந்து விலகுகிறார்களோ, அன்றுதான் நமது நாட்டைக் காப்பாற்ற முடியும்.

Wednesday, September 12, 2012

கூடங்குளம் மனித குலத்திற்கு கூடாதகுலம்

கூடங்குளம் மனித குலத்திற்கு கூடாதகுலம்


கூடங்குளம் பிரட்சினையை போரட்டக்குழுவும், அரசாங்கமும் தங்களின் இரு தரப்பு நிலைபாட்டிலும் அப்படியே முட்டுக்கட்டையாய் இருப்பதால் தற்போது இருக்கின்ற நிலை இன்னும் மோசமாக போவதற்கு வாய்புகள் அதிகமாக உள்ளது.  அரசாங்கமும் போரட்டகுழுவும் தற்போது இருக்கின்ற பதற்றத்தை தனித்து பொது மக்களை காப்பாற்ற, தங்கள் தரப்பில் இருவருமே விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தையை துவங்கினால் மாத்திரமே முடியும். 

கூர்மையாக சிந்திக்கும் திறம் கொண்டவர் நமது முதல்வர்.  ஆகவே இந்த நிலையை நீடிக்க விடுவது மாநிலத்திற்கு நல்லது அல்ல என்பது அவருக்கு நன்றாக தெரியும்.  யார் முதலில் துவங்குவது என்று தன்முனைப்பு இல்லாமல் இருவரும் இறங்கி வந்து உடனடியாக பேச்சுவார்த்தையை துவங்கவேண்டும். அரசாங்கத்தின் தரப்பிலே தற்போது இருக்கின்ற மின் வெட்டு பிரட்சினையை சமாளிக்க கூடங்குளத்தை நம்பியே தீரவேண்டும்.  15,000 கோடிக்கும் மேல் மக்களின் வரி பணத்தை செலவு செய்து முடிக்கப்பட்ட ஒரு திட்டத்தை திறப்பு விழாகூட காணாமல் மூடு விழா காணவேண்டும் என்பது ஏற்புடையது அல்ல.  அதே வேளையில் ஆபத்து விளைவிக்க கூடிய அணு உலை மின் திட்டம் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுகின்ற உரிமை அப்பகுதி மக்களுக்கு நிச்சயமாக உண்டு.  அந்த மக்களின் ஐயத்தை போக்கவேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.  ஆகவே தங்களின் கடமையை உணர்ந்து அரசு மக்களின் அச்சத்தை போக்கவேண்டும்.

அது போல அணு உலை எதிர்பாளர்களும், அந்த திட்டம் துவங்கும் போதே தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து, அதை வராமலே செய்திருக்க முடியும். ஆனால் திட்டம் முடிவடைந்து துவங்கப்படும் பொது அதை தடுக்க நினைப்பது ஏற்புடையது அல்ல.  அதே வேளையில் போரட்டக் குழுவினரின் பின்னணி, நோக்கமெல்லாம் செய்திகளில் அடிப்படுவதுபோல் தவறாகவே இருந்தாலும் கூட, அணு உலை நமக்கு வேண்டாம் என்ற அவர்களின் வாதம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடையது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

போராடக்குழுவினர் தங்களின் தொடர் போராட்டங்களின் மூலமாக மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் விதமாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான மனித வளங்களையும், 15,000 கொடிகளுக்கும் மேலாக பொருட் செலவையும் செலவு செய்து கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அந்த மிகப் பெரிய திட்டத்தை முடக்கிவிட முனைவது சிறுபிள்ளைத் தனமானது. அறிவார்ந்த சிந்தனை இருப்பின் அவர்கள் தங்களின் அழுத்தமான போராட்டத்தின் மூலமாக இந்த அணு உலை திட்டத்தை தடுக்க முடியவிட்டாலும், அதே கூடங்குளத்தில் மேலும் வர இருக்கின்ற நான்கு அணு உலைகலையும், மேலும் தமிழகத்தில் இனி எங்குமே அணு உலை வராமலும் தடுக்கக்கூடிய வகையிலே தங்களின் போராட்ட வியூகத்தை அமைத்தார்கள் என்றால், கூடங்குளத்தில் மாத்திரம் மையமிட்டிருக்கின்ற இந்த குறுகிய போராட்டம், ஒரு மிகப்பெரிய பெரிய அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கமாக உருவெடுக்க வாய்ப்பிருக்கின்றது.

ஆகவே, சூழ்நிலையை உணர்ந்து இரு தரப்புமே தடைகளை தாண்டி பேச்சு வார்த்தையை துவங்கினால், கூடங்குளம் பகுதி அப்பாவி பொது மக்களின் பதற்றம் தணிந்து அமைதியான சூழலை அங்கே உருவாக்கமுடியும்.  உச்சகட்ட பாதுகாப்புடன் இயக்கப்பட வேண்டிய அணு உலையை பதற்றமான சூழலில் இயக்குவது என்பது மனித தவறுகளுக்கு வழிவகுத்து ஆபத்தான விபத்துகளுக்கு வித்திட்டுவிடும் என்பதை இரு தரப்பும் உணர்ந்து, பதற்றத்தை தணிக்க முனைவது மனித குலத்திர்க்கே நல்லது.

Friday, September 7, 2012

தமிழனை இந்தியனாக மதியாத இந்திய அரசாங்கம்!

தமிழனை இந்தியனாக மதியாத இந்திய அரசாங்கம்!

தமிழனும் இந்தியன்தானா என்ற ஐயம் இப்பொழுது வலுக்கின்ற அளவிற்கு தமிழனை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஒரு ஆட்சி இன்று நடந்து கொண்டிறிக்கின்றது. தமிழன் உயிரைவிட்டு கூப்பாடு போட்டாலும் ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லாத ஒரு அரசியல் அனாதையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். தமிழனின் ஞாயமான கோரிக்கைகளை  கூட செவி மடுத்து கேட்பதற்கு நாதியற்றவனாக, சொந்த நாட்டிலே இரண்டாம் தர குடி மகனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

தனது இரத்த சொந்தம் கைக்கு எட்டும் தூரத்திலே ஈழ மண்ணிலே கொத்து குண்டுகள் வீசி கொத்துக்கறி ஆக்கப்பட்ட போது, அதை தடுத்து நிறுத்த இயலாத ஒரு கையாலாகதவனாக வாழ்ந்தான். ஈழத்திலே தமிழனுக்கு எதுரான இறுதிகட்ட போர் நடந்து கொண்டிருந்த பொது, தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் தமிழர்கள் கொதித்தெழுந்து தொடர் போராட்டங்களை நடத்தியும் கூட, அந்த ஈழ தமிழனுக்கு எதிரான இலங்கையின் போரை தடுத்து நிறுத்த மத்திய இந்திய அரசை அவனால் நிர்பந்திக்க முடியவில்லை.

அன்றைய மத்திய ஆட்சியிலே காங்கிரசுடன் கை கோர்த்து தமிழகத்தின் ஒட்டுமொத்த 40 பாராலுமன்ற உறுப்பினர்களையும் தன்னகத்தே கொண்டிருந்த தி.மு.க, தமிழகத்திலே ஆட்சியில் இருந்தும் கூட ஈழத் தமிழனை காப்பாற்ற ஒரு துரும்பை கூட நகர்த்தவில்லை என்பதுதான் உண்மை. 3 லட்சம் தமிழர்கள் ஈழத்திலே கொல்வதற்கு ஆயுதங்களையும், அறியுரைகளையும், பயிற்சிகளையும் இலங்கைக்கு கொடுத்து உதவியது திராவிட முன்னேற்ற கழகத்தின் மத்திய கூட்டணி ஆட்சிதான் என்பது உலகறிந்த உண்மை. அன்று ஈழத்திலே தமிழர்களை கொன்று குவிப்பதற்கு தி.மு.க வும் உடந்தையாக இருந்துவிட்டு, இன்று எதோ ஈழத் தமிழனை இவர்கள்தான் காப்பாற்றுவது போல மக்களை ஏமாற்றுவதற்காக டெசோ மாநாடு என்று அறிவித்துவிட்டு, அதிலே ஈழத்தை பற்றி பேச மாட்டார்களாம். டெசோ என்றால் (TESO - Tamil Ealam Supporters Organisation) தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு என்றுதானே அர்த்தம். ஈழம் என்ற பெயர் சோனியா (காந்தி)கானுக்கும், ராஜபக்சேவுக்கும் பிடிக்காது என்ற காரணத்திற்காக ஈழம் என்ற வார்த்தையையே தவிர்த்துவிட்டு மாநாடு நடத்தும் இவர்களா ஈழத்தமிழனை காப்பாற்ற போகின்றார்கள். தமிழின துரோகத்தை மூடி மறைபதர்க்கான முயர்ட்சிதான் இவர்களின் டெசோ மாநாடு.

இப்படி தமிழர்கள் ஈழத்திலே பெரிய அளவிலே அழிக்கப்பட்ட போதும், இன்று முள்வேலி முகாம் என்ற கொலை முகாம்களில் தமிழர்கள் சித்தரவதை செய்யப்பட்ட போதும் அவர்களை காப்பாற்ற கூப்பாடு போட்ட இந்திய தமிழனின் குரலை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத இந்திய அரசாங்கம், அங்கே தமிழர்களை கொன்று குவிக்கின்ற இலங்கை இராணுவத்திற்கு, இந்தியாவிலே அதுவும் தமிழக மண்ணிலே கொலை பயிர்ச்சி கொடுப்பது தமிழனை இந்த மத்திய அரசாங்கம் இந்தியனாகவே கருதவில்லையோ என்று கருதத்தோன்றுகிறது.

Monday, September 3, 2012

இலங்கை கப்பற்படைக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞான(மில்லாத)தேசிகன்.

இலங்கை கப்பற்படைக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞான(மில்லாத)தேசிகன்.


இலங்கை கப்பற்படைக்கு வக்காலத்து வாங்கும் விதமாக தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாக வருகின்ற செய்திகள் சித்தரிக்கப்படுகின்ற செய்திகள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞான(மில்லாத)தேசிகன் கூறி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஞான(மில்லாத)தேசிகன் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரா, அல்லது இலங்கையின் காங்கிரஸ் கட்சி தலைவரா என்ற ஞாயமான சந்தேகம் இப்பொழுது தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை ஆளும் கட்சியில் இருந்துகொண்டு தடுக்க முடியாத கையாலாகாத இவர், நாட்டின் இறையாண்மையை இலங்கையிடம் அடமானம் வைத்துக்கொண்டிருக்கும் இவரின் கட்சியின் செயலை தடுப்பதற்கு வக்கற்ற இவர், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக தமிழக மீனவர்களை மாத்திரமில்லாமல் ஒட்டு மொத்த தமிழர்களையும் இழிவு படுத்தும் விதமாக பேசி இருப்பதை தமிழக மக்கள் மன்னிக்க கூடாது.

ஞானதேசிகன் அவர்கள் இதுபோன்று பேசுவதற்கு முன்பு அந்த பகுதி மீனவர்களை நேரில் சந்தித்து விசாரித்திருக்க வேண்டும். நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மீனவர்கலின் இன்னல்களை பிறரிடம் கேட்டாவது அறிந்திருக்கவேண்டும். இப்படி எதுவுமே செய்யாமல் சத்தியமூர்த்தி பவனில் அமர்துகொண்டு உண்மையை அறியாமலே பேசுவது ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு அழகு இல்லை.

இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கப்பற்படையால் கொல்லப்பட்டிருக்கின்றர்கள், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து கை, கால்களை இழந்து வாழ்க்கையையே இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவக் குடும்பங்கள் வாழ்கையை இழந்து நடுத்தெருவில் நிற்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். உண்மை இப்படியெல்லாம் இருக்க இதை எல்லாம் மறைக்கும் விதமாக ஞானதேசிகன் அவர்கள் இப்படி பேசியிருப்பது, ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் இழிவுபடுத்துகின்ற செயலாகும்.  இதற்காக தமிழக மக்கள் இவரையும், இவர் சார்ந்த காங்கிரஸ் இயக்கத்தையும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

Monday, August 27, 2012

மின் பற்றாக்குறை - அரசின் மெத்தனமா? - அதிகாரிகளின் சதியா?

மின் பற்றாக்குறை - அரசின் மெத்தனமா? - அதிகாரிகளின் சதியா? 

தமிழகத்தின் கடந்த தி.மு.க ஆட்சி வீழ்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது மின் வெட்டு பிரட்சினையே.  இப்போது ஆட்சியில் இறுக்கும் அ.தி.மு.க, இந்த மின் வெட்டு பிரட்சினையை பெருதுபடுத்தி அதை வைத்தே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் மின் வெட்டு பிரட்சினையை சரி செய்வோம் என மக்களுக்கு வாக்கு கொடுத்தே அவர்களின் வாக்கை வாங்கினார்கள். ஆனால் 1 1/2 ஆண்டுகள் ஆகியும் கூட இன்றளவும் மின் வெட்டு பிரச்சினை தீர்க்கப்படமலே இருக்கின்றது. வாயாலே பந்தல் போட்டுக்கொண்டிருக்கின்றார்களே ஒழிய, மின் வெட்டை குறைப்பதற்கு எந்த ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையுமே எடுக்காமல் வெரும் அறிக்கைகளை மாத்திரம் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இரண்டு கட்சிகளின் ஆட்சிகள் மாறினாலும், நிர்வாகத்தில் இருக்கின்ற ஊழலின் காட்சிகள் மட்டும் மாறுவதே இல்லை.  இப்போதும் தொடர்கின்ற மின் வெட்டுக்கு இந்த ஊழலும் மிக முக்கியமான காரணமாகும்.  பல முறை இந்த ஊழலை பற்றி புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் 2 அரசாங்கங்களும் எடுக்கவில்லை. இதில் இரண்டு கட்சிகளின் ஆட்சியும் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன. மின் உற்பத்தி சாதனங்களை சரி செய்வதற்காக கொடுக்கப்படுகின்ற ஒப்பந்தங்களில் சில நிறுவனங்களுக்கு சாதகமாக கொடுப்பதில் மிகப்பெரிய ஊழல்கள் நடக்கின்றன.  பல ஒப்பந்தங்கள் 5 மடங்கு 10 மடங்கு அதிக விலைக்கு கொடுக்கின்றனர். இதில் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மிகப்பெரிய ஆதாயம் பெறுகின்றனர். பலன் பெறுவதால் அதிகாரிகளால் துரிதப்படுத்தவும் முடிவதில்லை, தரமாகவும் செய்யமுடிவதில்லை.  அதனால்தான் பல மின்னுற்பத்தி நிலையங்கள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. அதை சரி செய்யும் பணிகளும் தாமதமாக நடக்கின்றன. பல பணிகள் திரும்பத்திரும்ப பழுதாகிவிடுகின்றன.

என்னூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 5 மின்னுற்பத்தி இயந்திரத்தில் 4 பழுதடைந்து உள்ளது. தற்போது ஒன்று மாத்திரமே இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது பல மாதங்களாக இதே நிலை நீடிக்கின்றது. அதுவும் 5 ஆண்டுகளுக்கு முன்புதான் முழு மின் நிலையமும்  பெரும் பொருட் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது. புனரமைப்பு செய்யப்பட்ட இயந்திரங்கள் குறைந்தபட்சம் 30-35 ஆண்டுகள் திறனுடன் செயல்பட வேண்டும். ஆனால் தரமான புனரமைப்பு  காரணத்தால் 5 ஆண்டுகள் கூட சரியாக இயங்காமல் பழுதடைந்து உள்ளது என்றால் அங்கே என்ன நிர்வாகம் நடக்கின்றது?. இவ்வளவு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்?. அரசாங்கம் என்ன செய்துகொண்டிருகின்றது? என்ற கேள்விகள் எழுவது ஞாயம்தானே.

சோலையார் புனல் மின் நிலையத்தில் 35 MW மின்னுற்பத்தி திறன்  கொண்ட இயந்திரம் ஒரு ஆண்டுக்கு முன்பு பழுதடைந்தது. அதை 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்த நிறுவனம் 45 லட்சத்திற்கு டெண்டர் கோரி இருந்தனர். ஆனால் அவர்களின் டெண்டரை நிராகரித்துவிட்டு 5 கோடிக்கு வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு இன்றுவரை வேலையை முடிக்காமல் உள்ளனர். முந்தைய நிருவனத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தால் அவர்கள் 45 நாட்களில் வேலையை முடித்து மின்னுற்பத்தியை துவக்கி இருப்பார்கள்.  ஆனால் அதிக விலை கொடுத்தும் ஒரு ஆண்டிற்கும் மேலாக வேலையை முடிக்காமல் மின்னுற்பத்தியை இழந்து வருகின்றோம். ஏன் அதிக விலை கொடுத்தார்கள்? யார் யார் இதில் பலன் அடைந்தார்கள்? ஏன் அந்த பணியை துரிதபடுத்தவில்லை? மின்னுற்பத்தி இழப்பிற்கு யார் காரணம்? அரசாங்கம் என்ன செய்துகொண்டிருகின்றது என்ற கேள்விகள் எழுவது ஞாயம்தானே.

இதுபோல் காடம்பாறை புனல் மின் நிலையத்தில் 100 MW திறன் கொண்ட இயந்திரம் ஒரு ஆண்டாக பழுதடைந்துள்ளது.   இந்த டெண்டரிலும் முன்பு போலவே மற்ற நிறுவனங்களை தவிர்க்கும் வகையிலே டெண்டர் கோரி அவர்கள் விரும்பும் நிறுவனம் மாத்திரம் தகுதி பெரும் வகையில் தயாரித்து மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இன்றுவரையில் அந்த இயந்திரம் சரி செய்யப்படாமல் மின்னுற்பத்தி இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். அங்கே என்ன நிர்வாகம் நடக்கின்றது?. இவ்வளவு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்?. அரசாங்கம் என்ன செய்துகொண்டிருகின்றது? என்ற கேள்விகள் எழுவது ஞாயம்தானே.

மேலே கூறியதெல்லாம் வெறும் மாதிரிகள். நேர்மையான விசாரனை நடத்தினால் பல திமிங்கலங்கள் வெளியே வரும். பல அரசியல்வாதிகளும், பல அதிகாரிகளும் இதில் சிக்குவார்கள். எல்லாவட்டிற்கும் மேலக மாநிலத்தின் மின்னுற்பத்தி சீரடைந்து, தடை இல்லா மின்சாரம் பெற்று, தமிழ்நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்.




Tuesday, July 10, 2012

தமிழகம் இழந்து வரும் வாழ்வாதாரங்கள்- காவேரி, பாலாறு, முல்லைபெரியரை தொடர்ந்து இப்பொழுது தென் பென்னையார்

தமிழகம் இழந்து வரும் வாழ்வாதாரங்கள்- காவேரி, பாலாறு, முல்லைபெரியரை தொடர்ந்து இப்பொழுது தென் பென்னையார்



கிரிஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை செழுமை படுத்திக்கொண்டிருக்கின்ற ஒரே நதி தென் பென்னையார் என்று அழைக்கப்படுகின்ற பென்னையார் நதி மாத்திரமே. இது பிற நதிகளைபோன்று ஆண்டுதோறும் பாயும் நதியல்ல. கர்நாடகத்திலுள்ள நந்திமலையில்லிருந்து தோன்றும் இந்த நதி, மழைகாலத்தில் மாத்திரம் பாயும் நதி. ஒரு ஆண்டில் 15 - 20 நாட்கள் மாத்திரமே தண்ணீர் ஓடும் இந்த நதியை மட்டுமே இந்த 5 மாவட்டங்களும் நம்பி இருகின்றது. 

இந்த 15 - 20 நாட்களில் ஓடும் நதி நீர், ஒரு ஆண்டுக்கு தேவையான நிலத்தடி நீரை கொடுத்து, அந்த பகுதியின் விவசாயத்திற்கு அடிப்படை ஆதாரமாக திகழ்கின்றது. பென்னையார் பாயும் பகுதிகள் அத்தனையும் தமிழகத்தின் விவசாய உற்பத்தியில்  பெரும் பங்காற்றி வருகின்றது.

அந்த நதியில் பாயும் மிக குறைந்த நீரையும் தடுப்பதர்க்காக கர்நாடகம் முயன்று வருகின்றது.  பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி, தமிழகத்திற்கு வரும் மிக குறைந்த தண்ணீரையும் தடுத்துவிட முயன்று வருகின்றது. இந்த மோசமான செயலை உடனடியாக தடுத்து நிறுத்தவில்லை என்றால், தமிழகத்தின் அந்த 5 மாவட்டங்களுமே பாலைவனமாகும் என்பது உண்மை.

தமிழகம் ஏற்கனவே அனைத்து நீர் ஆதாரங்களையும் இழந்து வருகின்ற வேலையில், தற்போது பென்னையாரையும் இழக்கும் சூழல் உருவாகி வருகின்றது. தமிழகம் தனக்குரிய நதி நீர் பங்கீட்டிலே, மத்திய அரசாங்கத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது.  காவெரி, பாலாறு, முல்லைபெரியார் என்று தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் வேலையில், மீண்டும் பென்னையார்றிலும் அண்டை மாநிலமும், மத்திய அரசாங்கமும் வஞ்சனையை துவங்கிவிட்டது.

இதுவரையில் தமிழகம் இழந்ததெல்லாம் போதும். இனியும் தமிழகத்தில் நாம் இழப்பதற்க்கு ஒன்றுமே இல்லை. இனியும் நாம் பொருத்திருந்தோமென்றால், தமிழையும், தமிழ்நாட்டையும், தமிழனையும் இழந்து தமிழ் என்ற சொல் கூட இல்லாமல் போய்விடும். தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாதி, மத பேதமின்றி, தமிழர்களாய் ஒன்றுபட்டு போராட முன்வரவில்லையென்றால் தமிழகம் என்று ஒன்று இல்லாமலே போய்விடும். சு. ஆதவன்.